×

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த சோதனையில் அனைத்து ஆவணங்களுடன் வந்த 10 பேருக்கு ஹெல்மெட் பரிசு டிஎஸ்பி வழங்கினார்

வந்தவாசி, ஜன.31: வந்தவாசி காவல் உட்கோட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த வாகன சோதனையில் அனைத்து ஆவணங்களுடன் வந்த 10 பேருக்கு டிஎஸ்பி ஹெல்மெட் பரிசு வழங்கினார். வந்தவாசி காவல் உட்கோட்டத்தில் உள்ள வந்தவாசி(தெற்கு), வந்தவாசி(வடக்கு), தெள்ளார், கீழ்கொடுங்காலூர், பொன்னூர், தேசூர், வடவணக்கம்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்த வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த 468 பேர் உரிய ஆவணம் வைத்திருந்தனர். மேலும், இன்சூரன்ஸ் முறையாக செலுத்தியும், ெஹல்மெட் அணிந்து வந்ததால் அவர்களுக்கு காவல் துறையினர் கூப்பன் வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்டவர்களை குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு நேற்று முன்தினம் டிஎஸ்பி தங்கராமன் ஹெல்மெட் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

அப்போது, உரிய ஆவணத்துடன் ெஹல்மெட் அணிந்து வந்ததால் இந்த பரிசு உங்களுக்கு கிடைத்தது. இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். மேலும், ஹெல்மெட் அணிந்து பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் பெரும் ஆபத்து தவிர்க்கப்படும். இதனால், உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றார். இதில் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஏட்டுக்கள் பாலு, சதீஷ்குமார், டேவிட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : test ,
× RELATED வடகொரியா ஏவுகணை சோதனை